துறவு
கந்தைத் துணியில் கடவுளைக்கண்ட அன்னையே!
இறக்கும் தருவாயில் இருந்தவர்களை
இறைவனை சுவைக்கச் செய்த அன்னையே!
கைவிடப்பட்டவர்களுக்கு கரம் கொடுத்த அன்னையே!
முகம் சுளிக்கும் பணிகளையும் முகமலர்ச்சியோடு செய்த அன்னையே!
வாழும் போதே - வாழும் புனிதை என்று போற்றபட்ட அன்னையே!
உம்மை வணங்குகிறோம் - வாழ்த்துகிறோம் .
உம்மால் துறவு இன்னும் மேன்மை பெறுகிறது.
கருணை வடிவே
கருவுற மறுத்து
கருணையுற்று
கன்னியாய் இருந்து
கருணை வடிவாய்
கண்களில் நிறைந்தவளே!
முல்லைச் சிரிப்புடன்
முகிலாய்த் தோன்றி
முழு நிலவாய் மின்னி
முகம் உமிழ்ந்தோரின்
முகவரி ஆனவளே!
உன்ன உணவின்றி
உடுக்க உடையின்றி
உடல் நோயினால்
உதறிவிடப்பட்டோரின்
உறவை நின்றவளே!
நற்கருணை ப்ரசன்னமே
நலம் தரும் ஊற்றென
நாளும் பொழுதும் நாடி
நலிந்தோரின் உறவாய்
நானிலத்தில் மிளிர்ந்தவளே!
பொக்கை வாய் சிரிப்பில்
புன்னகை மாறாமலே
புது யுக பூபாளமாய்
புதிய தடம் கண்ட
பூமியின் தேவதையே!
பணத்தை நாடி
பதவிகளைத் தேடி
பாசங்கள் உதறும்
பாவிகள் எமக்காய்
பரிந்துரைப்பீரே!