"ஞானிகளிடம் அறிவுரை கேள். பயன் தரும் அறிவுரை எதையும் உதறித்தள்ளாதே" (தோபித்து 4:18) என்று தோபித்து கூறுவது போல அன்னை மரியாள் ஆலோசனையின் தாயாக விளங்குகிறாள்.

இத்தாலி நாட்டில் இருந்த மக்கள் தங்கள் வாழ்வில் அன்னை நல்ல ஆலோசனைகளை வழங்கிய காரணத்தால் "நல்ல ஆலோசனை அன்னை" என்ற பெயரில் ஆலயம் எழுப்பி வழிபட்டார்கள். இந்த அன்னையின் திருப்படத்தின் முன்னாள் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் தன் முதல் திருப்பலியை நிறைவேற்றினார். இந்த அன்னையின் அதிசயங்களையும் தீவீர பரிந்துரையையும் அனுபவித்து உணர்ந்ததால் திருத்தந்தை பதிமூன்றாம் லியோ "நல்ல ஆலோசனை அன்னை" என்ற தலைப்பை 1903ஆம் ஆண்டு மரியன்னையின் லோரெட்டா மன்றாட்டு மாலையில் இணைத்து கொண்டார்.

அன்னை ஆலோசனை கூறுபவராக, ஆலோசனை சொல்பவராக விவிலியத்தில் வலம் வருவதை நாம் பார்க்கலாம். கானாவூர் திருமண வீட்டில் இரசம் தட்டுப்பாடு ஏற்பட்டவுடன், " திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்ன செய்யலாம் என்று மகனிடம் கேட்டு விட்டு, தானே முன் வந்து பணியாளர்களிடம், " அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) என்று ஆலோசனை கூறுகிறார்.

திருமண வீட்டில் இருந்த குறையை களைய அன்னை ஆலோசனை சொல்பவராக வருகிறார். இன்று நமக்கும் ஆலோசனைகளை அள்ளி தருகிறார். ஆலோசனை கூறுபவர்களின் சிகரமாக அன்னை மரியாவை நாம் அடையாளம் காணலாம். நம் வாழ்வில் குழப்பங்கள் சூழ்ந்து என்ன செய்வது என தெரியாமல் திண்டாடும் போது அந்த குழப்பங்களுக்கு சரியான தீர்ப்பை கொடுப்பவராக அன்னை மரியாள் வருகின்றார். நம்முடைய வாழ்வில் சில திட்டங்களை தீட்டி அதை செயல் படுத்த முடியாமல் விக்கித்து போகும் போது சரியான ஆலோசனைகளை வாரி வழங்கி அன்னை நமக்கு உதவுவார்.

கானாவூர் வீட்டில் இருந்தே ஆலோசனைகளை வழங்கி வரும் அன்னை மரியா நாம் குழப்பமுறும் போதும் பிரச்சனைகளை சந்திக்கும் போதும் கூடவே உறுதுணையாக இருந்து வழிநடத்துவார் என்பது எண்பிக்கப்பட்ட உண்மை. ஆகவே அப்படிப்பட்ட ஆலோசனைகளை தரும் அன்னையை நாம் கரம் பிடிப்போம். ஆலோசனைகளை பெறுவோம்.

நல்ல ஆலோசனையின் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!