பிறப்பு என்ற வார்த்தையைக் கேட்டவுடன் ஒருவிதமான மகிழ்ச்சி நம் உள்ளத்தில் தோன்றும். பிறப்பு தரித்திரமாக இருந்தாலும் இறப்பு சரித்திரமாகட்டும் என்பார்கள். பிறப்பு என்பது நமது கையில் இல்லை .இறப்பு என்பதும் நமது கையில் இல்லை. ஆனால் வாழுகின்ற வாழ்க்கை நமது கையில் இருக்கிறது. அன்னை மரியாள் தன் பிறப்புக்கு தன்னுடைய வாழ்வின் வழியாக பெருமை சேர்த்துள்ளார். அன்னை மரியாள் ஒருவேளை மீட்பு திட்டத்திற்கு கையளிக்கவில்லையென்றால், நிச்சயமாக அவரின் பிறப்பு நம்மால் பேசப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் அன்னை மரியாள் தன்னை மீட்பின் கருவியாக கடவுளிடம் கையளித்து அதன் வழியாக பிறப்பிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

நம்முடைய கத்தோலிக்கத் திருஅவையில் மூன்று நபர்களுக்கு மட்டும் தான் பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். ஆண்டவர் இயேசு, அன்னை மரியாள் மற்றும் திருமுழுக்கு யோவான் ஆகியோரே அந்த மூவர். இந்தப் பிறப்பு விழா நமக்குச் சொல்லும் செய்தி என்னவென்றால் நம்முடைய பிறப்பின் நோக்கத்தை அறிந்து கடவுளின் திருவுளத்திற்கு நம்மை கையளிப்பதாகும். அன்னை மரியாள் தன்னையே முழுவதுமாக கடவுளிடம் ஒப்படைத்து இறைவனின் திட்டப்படி வாழ்ந்த காரணத்தினால், கடவுள் அவரை உயர்த்தினார்.

கடவுள் அன்னை மரியாவை உயர்த்தியதற்கு காரணங்கள் இருக்கின்றன. அன்னை மரியாவின் தாழ்ச்சி முதல் காரணமாகும். முதல் தாயான ஏவாள் கடவுளின் கட்டளைக்கு கீழ்படியாமல் பாவம் செய்து சாத்தானுக்கு அடிமையானார். ஆனால் அன்னை மரியாள் "இதோ ஆண்டவரின் அடிமை " என்று கடவுளின் திட்டத்திற்கு தன்னையே முழுவதுமாக கையளித்து கடவுளின் பார்வையில் உயர்வான செயலைச் செய்தார். எனவே கடவுள் அவரை தாழ்நிலையிலிருந்து உயர்த்தினார் .

அன்னை மரியாவின் சீடத்துவ வாழ்வு இரண்டாவது காரணமாகும். என்னதான் ஆண்டவர் இயேசுவுக்கு அன்னைமரியாள் தாயாக இருந்தாலும், அன்னை மரியாள் இயேசுவின் உண்மைச் சீடராக இருந்தார். அவரை கருவில் சுமந்தது முதல் கல்வாரிப் பயணத்தில் உடன் நடந்தது வரை இயேசுவின் உண்மைச் சீடராக திகழ்ந்தார். அதன் பொருட்டு தான் சந்தித்த அனைத்து துன்பங்களையும் எதிர் கொண்டார். எனவே கடவுள் அவரை உயர்த்தினார்.

தேவையில் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் மனநிலை மூன்றாவது காரணமாகும். அன்னை மரியாள் இயல்பிலேயே உதவி செய்யக்கூடிய நல்ல மனநிலையைக் கொண்டிருந்தார். எனவேதான் வயதான எலிசபெத்தம்மாளுக்கு உதவி செய்ய விரைந்து சென்றார். கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்து போன பொழுது தன் மகனிடம் பரிந்து பேசி உதவி செய்தார். இப்படிப்பட்ட உதவி செய்யக்கூடிய மனநிலை அன்னை மரியாவிடம் அதிகமாக இருந்தது. எனவே கடவுள் அவரை உயர்த்தினார்.

அன்னை மரியாவின் தூய்மை வாழ்வு நான்காவது காரணமாகும். அன்னை மரியாள் தன் வாழ்நாள் முழுவதும் தூய்மையான வாழ்வு வாழ்ந்தார். தன்னுடைய கற்பை கடவுளுக்கு முழுமையாக கையளித்தார். சிற்றின்பகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நிலை வாழ்வைக் கொடுக்கும் இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். எனவே கடவுள் அவரை உயர்த்தினார்.

அன்னை மரியாவின் ஆழமான இறைநம்பிக்கை ஐந்தாவது காரணமாகும். இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளும் பொழுது கடவுளால் உயர்த்தப்படுவோம் என்பதற்கு அன்னை மரியாள் ஒரு முன்னுதாரணம். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்பதை ஆழமாக நம்பித்தான் இறைத் திட்டத்திற்கு தன்னையே முழுமையாக கையளித்து சாட்சியமுள்ள மீட்பின் தாயாக உயர்ந்தார். கடவுளும் அவரை மீட்பரின் தாயாக உயர்த்தினார்.

அன்னை மரியாவின் பிறப்பு விழாவை ஆரோக்கிய அன்னையின் பெருவிழா என்று கொண்டாடி மகிழ்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் அன்னை மரியாவின் பிறப்பு விழா வந்து செல்கிறது. ஆனால் அந்த பிறப்பு பெருவிழாவில் நாம் என்ன மதிப்பீடுகளை கற்று வருகிறோம் என்று ஆழமாக சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். மேற்கூறிய ஐந்து மதிப்பீடுகளையும் நம்முடைய வாழ்க்கையிலே வாழ்வாக்க முயற்சி செய்யும்பொழுது, நாமும் அன்னை மரியாவைப் போல கடவுளால் உயர்த்தப்படுவோம். எனவே ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழாவில் அன்னை மரியாவின் மதிப்பீடுகளை வாழ்வாக்க தேவையான அருள் வேண்டுவோம். அப்பொழுது நம்முடைய பிறப்பும் சரித்திரமாக மாறும்.

வல்லமையுள்ள இறைவா! அன்னை மரியாவின் பிறப்பு எங்கள் அனைவருக்கும் சிறப்பாக இருக்க தேவையான அருளைத் தாரும். அன்னை மரியாள் கொண்டிருந்த நல்ல மதிப்பீடுகளை வாழ்வாக்கி, சாட்சியமுள்ள வாழ்வு வாழ்ந்திட தேவையான அருளைத் தாரும். ஆமென்.

-Christy Sekar