இதோ தவக்காலம் தொடங்கி விட்டது. பெருமையுடன் சாம்பல் பூசி ஒரு வாரமும் ஓடிவிட்டது. இத்தவக்காலத்தில் என்ன தவிர்க்கலாம் என்று பலவாறு யோசித்து முடித்தாயிற்று. இனிப்பை தவிர்ப்போமென்று பெண்களும், Facebook , Twitter-ஐ தவிர்ப்போமென்று இளைஞர்களும், வழக்கம் போல அசைவத்தை தவிர்ப்போமென்று பெரியோர்களும் முடிவு செய்தாயிற்று. இனி நேராக புனித வாரத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில தவக்கால சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

தவக்காலத்தில் நாம் ஒறுத்தல்களைச் செய்வதும், யேசுவின் சிலுவைப்பாதைகளை நினைவு கூர்வதும் , நாம் கடவுளை நெருங்க உதவுகிறது. நாம் கடவுளோடு இணைந்திருந்தால் அது மனிதம். கடவுள் நம்மோடு இணைந்திருந்தால் அது புனிதம். நம் அன்றாட அலுவல்களில் தளர்ச்சி அடையும்போதும், நோயினால் வருந்தும்போதும், “ ஆண்டவரே நீர் சிலுவையின் பாரத்தோடு நடக்கும்போது , எவ்வளவு வேதனையை அனுபவித்தீர். உமக்கு பரிகாரமாக என் இச்சிறிய துன்பத்தையும் ஒப்புக் கொடுக்கிறேன் “ என்று செபிக்கும் பொழுது, அது ஆசீரைக் கொண்டு வரும் தவமாக மாறுகிறது. இப்படி ஒவ்வொரு சிறு இன்னல்களையும் மற்றவர்களின் துயர் நீக்க பரிகாரமாக ஒப்புக் கொடுக்கும் பொழுது , கடவுள் நம்மோடு இணைகிறார். நம்மை புனிதமாக்குகிறார்.

வருடம் முழுவதும், குழந்தைகளுடன் செலவிட நேரமின்றி, நாம் எதையாவது தேடி ஓடிக் கொண்டேயிருக்கின்றோம். இந்த தவக்காலத்தில் ஆண்டவரின் பாடுகளை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி , அவர்களது கிறிஸ்தவ நம்பிக்கையை உறுதிப்படுத்துவது பெற்றோர்களின் தலையாய கடமையாகும். பணம், பட்டம், பதவிகளை விட மனிதாபிமானமும் , நற்செயல்களுமே சிறந்தது என்பதை அவர்களுக்கு உணர்த்திட வேண்டும். குழந்தைகள் தங்களுக்கு பிடிக்காத உணவை உண்ணும் போதும், screen-time-ஐ குறைக்கும் போதும், அதன் பலன்களை யேசுவுக்கு ஒப்புக் கொடுத்து பழக்க வேண்டும்.

நாமும் இத்தவக்காலத்தில் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, குழந்தைகளுக்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டும். கோபத்தை விடுத்து, சமாதானத்தோடு வாழ்ந்து தவக்காலத்தினை சிறப்பிப்போம். தவக்காலத்தில் நாம் மேற்கொண்ட ஜெப தபங்களையும் , பிறருக்கான ஒறுத்தல் முயற்சிகளையும், வருடம் முழுவதும் தொடர்ந்து, இறையாசீரை நிறைவாக பெற்றுக் கொள்வோம்.

நன்றி