இறைவனுக்கு அடுத்தபடியாக , மரியா பேரிலுள்ள பக்தி நமக்கு அடித்தளமாகும். “மரியா எல்லாம் வல்ல இறைவனின் சொல்லரிய புதுமை” என்கிறார் பாப்பாண்டவர் 9-ம் பத்திநாதர். ஆனால் கடவுளின் முன்னிலையில் மரியாவின் நிலை என்ன ? உலக மாந்தர் அனைவரையும் போல் கடவுள் அவளையும் ஒன்றுமில்லாமையிலிருந்தே படைத்தார். படைத்த பிறகு எண்ணற்ற வரங்களை அவள் மீது பொழிந்து உன்னத நிலைக்கு அவளை உயர்த்தினார். ஆனாலும் அவளைப் படைத்த இறைவனுக்கு முன் ஒப்பிட்டால் அவள், அவள் இன்னும் ஒன்றுமில்லாமைதான். உண்மையாகவே படைப்புகள் அனைத்தையும் விட மரியாதான் அவருடைய மிகச் சிறந்த படைப்பாகும். ஏனெனில் கடவுள் பிற படைப்புகளுக்கு கொடுத்ததை விட மிகுதியாகவே அவளுக்கு கொடுத்திருக்கிறார். எவ்வளவுக்கெவ்வளவு கடவுள் அவரில் பெருங்காரியங்களைச் செய்திருக்கின்றாரோ, அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அவளில் இறைவனின் செயல்திறன் ஒளி வீசுகிறது. நித்திய காலந்தொட்டு இறைவனின் உலக மீட்புத் திட்டத்தில் மீட்பரோடு மரியாவும் இடம் பெற்றிருந்தார். தமது திட்டங்களில் இறைவன் மரியாவக்குச் சிறப்பான பங்கு கொடுத்திருந்தார். தம் திருமகனுக்கும் அவரோடு ஒன்றிக்கப்பட்டவர்களுக்கும் அவளை உண்மையான தாயாகக் கொடுத்தார். ஏன் இவ்வளவு வர்ங்களை அவள் மீது பொழிந்தார். அதற்கு இரண்டு காரணங்களை கூறலாம்.
முதலாவது : படைப்புகள் எல்லாம் ஒருங்கிணைந்து கடவுளுக்குக் கொடுக்கக் கூடிய மகிமையை விட மிகுதியாக , மரியா ஒருவரிடமிருந்து அவர் பெறுவார் என்பது.
இரண்டாவது: மரியாவைப் போல் நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்குக் கொடுக்கும் மகிமையின் ஒளி, நாம் சரிவர கண்டுபிடிக்க இயலாத அளவுக்குப் பெருகிப் படர வேண்டுமென்று அவர் விரும்பினார் என்பது. ஆகவே, நம் தாயும் , உடன் மீட்பருமாகிய மரியாவுக்கு நாம் ஒப்புக்கொடுக்கும் செபங்களும் சேவைகளும், கடவுளின் மகிமையைச் சிறிதளவும் குறைப்பதில்லை. அவருக்கு நாம் கொடுக்கும் அன்பும், வணக்கமும் குறைவின்றி கடவுளுக்குப் போய்ச் சேருகின்றது. குறைவின்றிச் சேர்வது மட்டுமல்ல , இன்னும், பெருகிப் பேரொளியுடனே சேர்கின்றது.