இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா
“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்.” (யோவான் 11 :25-26 )
இறந்த இயேசு தாம் சொன்னபடியே மூன்றாம் நாள் உடலோடும் ஆன்மாவோடும் உயிர்த்தெழுந்தார் ,அல்லேலூயா ! உயிருடன் எழுப்பப்பட்ட அவர் இனி இறக்க மாட்டார். சாவை வென்றவர் அவருக்கு மாட்சி உண்டாகுக. இறையேசுவில் பிரியமானவர்களே, இயேசுவின் மீட்பின் வரலாற்றிலேயே மிகவும் முக்கியமானது உயிர்ப்பு பெருவிழா தான். அவர் உயிர்த்தெழவில்லை என்றால் கத்தோலிக்கத் திருஅவையே இல்லை எனலாம்.
ஒலிவமலை:
ஒலிவமலை எருசலேம் நகரில் இருந்து 300 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதி ஆகும். இயேசுவின் வாழ்வில் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நிகழ்ந்துள்ளது , என்பது இதன் சிறப்பு. மாபெரும் நிகழ்வாகிய இயேசுவின் விண்ணேற்பு நிகழ்ந்ததும் இம்மலையில் தான்.
இயேசு விண்ணேற்பு அடைந்த இடத்தில் ஆலயம் ஒன்று உள்ளது. ஒலிவ மலையில் கட்டப்பட்ட இந்த ஆலயமே முதன் முதலில் கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயமாகும். கிபி 390ல் ஒலிவ மலையின் உச்சியில் இந்த ஆலயம் கட்டப்பட்டது. இயேசுவின் விண்ணேற்பு க்கு இந்த ஆலயம் சான்று பகர்ந்து கொண்டிருக்கிறது. கிபி 610 பெர்சியர்களால் இந்த ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டது. கிபி 1110 மூன்று கோபுரம் கொண்ட ஆலயமாக கட்டி எழுப்பப்பட்டது. அந்த ஆலயத்தில் இன்றும் ரோமன் கத்தோலிக்கர்கள் மட்டும் ஆலயத்தினுள் சென்று வழிபாடு நடத்திட அனுமதிக்கப்படுகின்றனர். இயேசு விண்ணேற்பு அடைந்த பொழுது பதிந்த அவரது பாதம் ஆலயத்தினுள் பாதுகாக்கப்படுகிறது.
உயிர்த்த இயேசு நாற்பது நாட்கள் மண்ணுலகிலிருந்து எல்லாரையும் திடப்படுத்திய பின் விண்ணுலகம் சென்று தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து நமக்காக பரிந்து பேசுகிறார். உயிர்த்த இயேசு சீடர்களுக்கு தோன்றி “உங்களுக்கு அமைதி உண்டாகுக” என்று வாழ்த்துகிறார். நாமும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது உங்களுக்கு சமாதானம் என்று சொல்லி அன்பை பரிமாற வேண்டும் என்பதே அவர் விருப்பம்.
தீமைக்கு பதில் தீமை செய்யாமலும் , யாரையும் சபிக்காமல் ஆசி கூறியும், யாரையும் பழி வாங்காமல் எல்லாரோடும் அமைதியுடன் வாழ்ந்து, ஆண்டவரில் அகமகிழ்ந்து, அன்பில் நிலைத்திருந்து உண்மையான இயேசுவின் சீடராக வாழ உயிர்த்த இயேசு நம்மை அழைக்கிறார்.
சிந்தனைக்கு:
உயிர்த்தெழுந்தவர் சிலுவையில் அறையப்பட்டவர் என்பதை நாம் மறக்கக்கூடாது. எல்லாம் வல்லவருமான இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்கி, அதன்படி வாழ்வோம். கிறிஸ்துவின் சீடர்களாக, நாம் அவரைப் பின் தொடர்வோம். உயிர்த்த இயேசுவை இதயத்தில் தாங்கி நம்முடைய மகிழ்ச்சியை எல்லா இடங்களிலும் பரப்புவோம். அவருடைய உயிர்த்தெழுதலுக்கு மகிழ்ச்சியான மற்றும் நம்பிக்கையான சாட்சிகளாக இருப்போம் - ஆமென். “அல்லேலூயா” !
“ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்”
- Beena Tony