பரம தந்தை அன்னை கன்னிமரியாளை எப்படி இயேசுவுக்குத் தாயாக இருக்கும்படி முன் குறித்து வைத்தாரோ அப்படியே புனித சூசையப்பரையும் மாதாவுக்கு கணவரைப் போலவும் இயேசுவுக்கு வளர்ப்புத் தந்தையாய் இருக்குமாறு முன்குறித்து வைத்தார்.
புனித சூசையப்பரின் கரத்தில் இருக்கும் லீலிமலருக்கு ஒரு மரபு பின்னணி உண்டு.அவரின் பரிசுத்த வாழ்வுக்கும், கற்புநிறை தூய்மைக்கும் அது ஒரு அடையாளம்.
அன்னை கன்னிமரியாள், ஜென்மபாவ மாசு அணுகாத பிறவியாய் இருந்ததால் பரிசுத்தமும் அழகும் நிரம்பிய இளம் மங்கையாக இருந்தார். எனவே அநேகர் அவரைத் திருமணம் செய்ய முன்வந்து கொண்டே இருந்தார்கள்.
அப்பொழுது பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்ட சிமியோன் தீர்க்கதரசி திருமண மண்டபத்தில் பெண் கேட்க வந்தவர்களிடம் யார் கரங்களில் உள்ள ஊன்றுகோல் தளிர்க்கிறதோ அவர்கள்தான் மரியாளுக்குக் கணவராக வரமுடியும் என்றார்.
இந்த நிகழ்வை வேடிக்கை பார்க்க வந்தவரான புனித சூசையின் கோலில் வெண்மலர் தளிர்த்தது. அதன்பின் அவர் மாதாவுக்குக் கணவரானார்.
பரம தந்தை நீதிமானாகிய புனித சூசையப்பருக்கு இயேசுவின் மீட்புப் பணியில் பங்கு பெறும் பாக்கியத்தையும் கொடுக்கிறார்.
- தூய ஆவியினால் கருவுற்ற மரியாளை வானதூதரின் வார்த்தையின்படியே ஏற்று ஒரு கணவரைப் போல இருக்க சம்மதிக்கிறார்.அன்புடன் நேசிக்கும் ஒருதாய் போல் மரியாளை பாதுகாக்கிறார்.
- பெத்லகேம் வீதிகளில் மரியாள் இயேசுவைப் பெற்றெடுக்கப் புகலிடம் தேடிய போது பொறுமையும்,அன்பும்,கனிவும்,நிறைந்தவராகவே நல்லிடம் தேடுகிறார்.
- இயேசு இறைமகன் மாட்டுக் குடிலில் பிறந்தபோது தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த பாலன் இயேசுவை இறைமகனாய் விசுவசித்து ஆராதனை செய்கிறார்.
- பாலன் இயேசுவைத் தூக்கிக் கொண்டு எகிப்து நாட்டிற்கு ஓடிப்போ என்றபோது இறைபராமரிப்பிலும் இறைவழிநடத்துதலிலும் நம்பிக்கைவைத்து அந்நிய நாட்டில் மூன்று ஆண்டுகள் இறைத்திட்டத்திற்கு கீழ்ப்படிந்து திருகும்பத்தைப் பாதுகாக்கிறார்.
- நாற்பது நாட்கள் நிறைவுற்ற பாலன் இயேசுவை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கச் சென்றபோது சிமியோன் தீர்க்கதரிசி பாலன் இயேசுவைப் பற்றிய இறைவாக்காக உலகம் முழுதும் இவரால் மீட்பைக் காணும் என்ற அருள்மொழி கேட்டு இறைப் புகழ்பாடுகிறார்.
- 12 வயதில் காணாமல் போன இயேசுவைக் கண்டுபிடித்த போது மட்டில்லா மகிழ்வு கொண்டு மாதாவையும் சிறுவன் இயேசுவையும் நாசரேத்துக்கு கூட்டிச்சென்று எளிய தச்சுத்தொழிலில் திருகுடும்பத்தைப் பராமரிக்கிறார்.
நீதிமானாகிய புனித சூசையப்பர் இயேசுவின் மீட்புத் திட்டத்தில் பெரும்பங்கு வகித்தவர்.இயேசுவின் வளர்ப்புத்தகப்பன் இயேவைப் பாலபருவத்திலும் தூக்கி அணைத்து அன்புசெய்து உலக மீட்புக்காய் அவரை ஒப்புக் கொடுக்கிறார்.
இவ்வாறு திருகுடும்பத்தின் பாதுகாவலராக இருந்த புனித சூசையப்பர் இன்றும் நமக்காகப் பரிந்துபேசும் ஒப்பற்ற புனிதராய் விண்ணகத்தில் விளங்குகிறார். நம்மைப் போல் எல்லா துன்பமும் அனுபவித்தவர், எனவே துன்பப்படும் யாவருக்கும் ஆசீர் பெற்று தருகிறார்.
இவர் வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசாத நிலையை விவிலியம் காண்பிக்கிறது.எனினும் ஒப்பற்ற புனிதராய் உலகம் அவரைப் போற்றுகிறது.
கார்மேல் பெண் துறவியர்களின் பாதுகாவலரே புனித சூசையப்பர்தான். நற்படிப்பின் பாதுகாவலராக நன் மரணத்தின் துணைவராக, அநேக கல்வி நிறுவனங்களின், ஆலயங்களின், அன்பு நிறுவனங்களின் பாதுகாவலராக இருக்கும் புனித சூசையப்பரிடம் நாளும் நம்பிக்கைக் கொண்டு ஜெபிப்போம்.